Tuesday, April 29, 2014

பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல ஐந்து யோசனைகள்

பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டுமா இதோ ஐந்து யோசனைகள்...

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் பின்பு,

1) வேட்ப்புமனு தாக்கல் செய்யும்போது ஓட்டிற்கு பணம் கொடுத்த கட்சியை சார்ந்தவர்கள் வேட்ப்புமனு தாக்கல் செய்ய வந்தால் தகுந்த சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் வேட்பாளர்களின் வேட்ப்புமனுவை நிராகரிக்கலாம்.

2) வேட்ப்புமனு சரிபார்க்கும் தருணத்தில் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் வேட்பாளர்களின் வேட்ப்புமனுவை நிராகரிக்கலாம்.



3) மின்னணு வாக்கு எந்திரத்தில் கட்சிகளுக்கான சின்னங்கள் பொறிக்கப்படும்போது  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் சின்னத்தை இணைக்காமல் விட்டுவிடலாம்.

4) வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சிக்கு பதிவான வாக்குகளை எண்ணாமல் விட்டுவிடலாம்.

5) A என்ற கட்சியை சார்ந்த நபர் தன்னை B என்ற கட்சியின் நபர் என்று கூறி குழப்பங்களை செய்ய நினைக்கலாம் என்ற சூழ்நிலையை மேற்கண்ட 4 யோசனைகள் உண்டாக்கிவிடுவதால் இந்த ஐந்தாம் யோசனையும் நாம் சேர்த்துக்கொள்வோம்.

பணம் கொடுக்கும் நபர் எந்த கட்சியை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஓட்டிற்கு பணம் கொடுத்ததாக ஒருவர் தகுந்த ஆவணங்களுடன் பிடிபட்டால் ஜனநாயகத்தை கொலை செய்தார் என்ற அடிப்படையில் எந்த வித பாகுபாடுமின்றி, எந்த நீதி மன்றத்திலும் மேல்முறையீடு செய்யமுடியாது என்ற சிறப்பு குறிப்புடன் 10 வருடம் சிறை தண்டனை விதிப்பதுடன், அந்த நபரை சார்ந்த அவரது குடும்பத்தின் 3 தலைமுறைக்கு (அவர், அவரது மகன், அவரது மகனின் மகன்) இந்திய குடியுரிமை பறிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவரப்படுமாயின் பணநாயகம் ஜனநாயகத்தை வெல்லாமல் தடுக்கலாம்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Tuesday, April 15, 2014

புதுவை நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுகிறது பாஜக

வரும் 24-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

எப்போதுமே இல்லாத வகையில் இந்த தேர்தலில் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. பாஜக பெரிய கூட்டணி பலத்துடனும், திமுக ஜாதி மதம் சார்ந்த சிறு  கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளான அதிமுக கம்யூனிஸ்ட்  மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனியாகவும் களம் காணுகின்றன.


புதுவையை பொறுத்தவரையில் ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது, அங்கு பாமக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பாஜக - வுடன் கூட்டணியில் இருக்கும் பாமக புதுவையில் தனித்து களம் காண்கிறது,  என் ஆர் காங்கிரஸ் பாஜக -வுடன் இணைந்து களம் காண்கிறது. பாமக-விற்கு மதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் புதுவையில் பாஜக ஆதரிக்கும் என் ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வாக்கு சேகரிக்கின்றன, கூட்டணிக்குள்ளே குழப்பம் என்றெல்லாம் செய்திகள் வந்தன. முதலில் புதுவையில் யாருக்குமே ஆதரவு அளிக்காத தேமுதிக இப்போது பாமக விற்கு ஆதரவு தருவதாக அக்கட்சியின்  தலைமை  அறிவித்ததை அடுத்து "பாய்ந்த ராமதாஸ் பயந்த விஜயகாந்த்" என்பது போன்று செய்திதாள்கள் தலையங்கம் வெளியிட்டுள்ளன.

இங்கேதான் பாஜக -வின்  அரசியல் சதுரங்கம் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு 40 தொகுதிகளில் முதல் வெற்றி தொகுதியை பதிவு செய்துள்ளது.


புதுவையில் பாமக என் ஆர் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருப்பதால் என் ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாஜக கூட்டணில் இருப்பதால் அந்த கட்சி நரேந்திர மோடி பிரதமராக ஆதரவளிக்கும், அதேபோல் பாமக வெற்றிபெற்றால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக நிச்சயமாக நரேந்திர மோடி பிரதமராக ஆதரவளிக்கும். ஆக 40 - இல் முதல் வெற்றிக்கனியாக புதுவை நாடாளுமன்ற தொகுதியை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது பாஜக.

வாழ்த்துகள்...!

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Tuesday, April 8, 2014

தமிழனின் தன்மானத்தை வெட்டிபார்க்கும் "கத்தி"

காவலன் திரைப்படம் அன்றைய ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டது, தலைவா திரைப்படம் இன்றைய ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டது என்று தொடர்ந்து பிரச்சனைகளின் பின்னணியில் சிக்கி தவிக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது சிக்கி இருப்பது தமிழ் உணர்வாளர்களின் கையில்.

ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிக்கும் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு கத்தி என்று அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது.



கத்தி திரைப்படத்தை ஐங்கரன் நிறுவனத்துடன் லைக்கா என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த லைக்கா என்ற நிறுவனம் சிங்கள இனவெறியன் ராஜபக்சேயின் நெருங்கிய நண்பர்களின் நிறுவனம் என்றும் இந்த நிறுவனத்தில் ராஜபக்சேயின் மகனும் ஒரு பங்குதாரர் என்றும் தெரிகிறது.

இப்போது தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் நடிகர் விஜயை இந்த திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றனர். உண்மைதான் இந்த திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய் அவர்கள் வெளியேற வேண்டும் தமிழரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்பதுதான் நடிகர் விஜயின் நலன் விரும்பிகள் அனைவரின் கத்தாக இருக்கிறது.


இந்த பிரச்சனையை பொறுத்தவரையில் இதை ஒரு திரைப்படமாகவோ பொழுதுபோக்கு அம்சமாகவோ பார்க்கமுடியாது. இது தமிழர்களின் தன்மானப்பிரச்சனை, நம் உறவுகளை அழித்து ஒழித்தவனுக்கு பிரலமான நாயகனாக இருக்கும் விஜய் அவர்கள் வருமானத்தை ஈட்டி கொடுத்தால் அது தமிழனை அவமதிப்பதுபோல் ஆகும். ஆகவே நடிகர் விஜய் அவர்கள் இந்த பிரச்சனையில் அடுத்தகட்ட படபிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

முன்னமே ஒரு முறை நடிகர் விஜய் அவர்கள் நாகபட்டினத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இனி தமிழனின் மீது கை வைத்தால் இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லாது போகும் என்று பதிவு செந்திருந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கும் என்றே கருதுகிறோம்.

உண்மையாகவே அவர் இந்த கருத்தை தமிழர்களின் மீது கொண்ட அன்பால் சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையில் நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும்.

ஒரு படம் நடிப்பதற்கு அவர் வாங்கும் சம்பளம்  பலபேர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சம்பாதித்துவிட முடியாது. அவ்வளவு உயரத்தில் இருக்கும் விஜய் அவர்கள் இந்த லைக்கா நிறுவனத்தின் படத்திலிருந்து விலகவேண்டும் இல்லை என்றால் லைக்கா என்ற இந்த நிறுவனம் இந்த படத்தயாரிப்பை விட்டு விலக வேண்டும். இதுவே தமிழ் உணர்வாளர்கள் அத்தனைபேரின் எண்ணம்.



மேலும் ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது, என்னதான் உயிருக்குயிரான ரசிகராக இருந்தாலும் விஜய் அவர்கள் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தால் அவரது ரசிகர்கள் அவரக்கு எதிராக திரும்பும் நிலை வந்துவிடும், அப்படி வந்தால் சமீபத்தில் வெளியான இனம் திரைப்படத்தின் நிலைதான் கத்தி திரைப்படத்திற்கும், அமெரிக்க தியேட்டரில் இனம் திரைப்படத்தின் வசூல் 1800 இந்திய ரூபாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் கத்தி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Monday, April 7, 2014

முதல் கோணல் முற்றும் கோணலா?

இன்று தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் திருவிழா. தமிழகத்தில் வரும் 24 - ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு பதிவிற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்கியது. வரும் 9 - ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாள் என்ற நிலையில் இன்று நீலகிரி தொகுதியில் பா.ஜ.க, வேட்பாளர் மனு தள்ளுபடி. இதனால் நீலகிரி தொகுதியில் பா ஜ க போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.

நாட்டை ஆளப்போகிறோம் வல்லரசு ஆக்கப்போகிறோம் என்று கூவிகொண்டிருக்கும் கட்சியில் ஒரு வேட்பாளருக்கு ஒரு படிவம் கூட நிரப்ப தெரியவில்லையா என்ற கேள்வி எழும் போது காரணம் படிவம் நிரப்ப தெரியாதது அல்ல, தன்னை பற்றிய உண்மையான தகவல்களை மறைத்தது என்று தெரிகிறது.



இப்போதே இவ்வளவு தகிடு தத்தம் செய்யும் இவர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது என்ற கேள்வியும், கடைசியாக நம்பி இருந்த மோடியின் கட்சிக்காரகளும் இந்த நிலைதான் என்னும் போது யாருக்குதான் வாக்களிப்பது என்பதுதான் மக்களின் கேள்வி.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்களிப்பதில் பிரச்சனை, கட்சி பெண் நிர்வாகிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படாததில் பிரச்சனை, இப்போது 40 - இல் ஒரு தொகுதி இழந்தாகிவிட்டது என்ற நிலை. ஆகா முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடுமோ என்ற பயமும் தமிழக பா ஜ க கட்சியினரை தொற்றிக்கொண்டுள்ளது.

பார்க்கலாம் மோடி வித்தை பலிக்கிறதா என்று!

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Saturday, April 5, 2014

காமராஜர் ஆட்சியும் களவாணி காங்கிரசும்

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் என்பதும் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பதும் நாம் அறிந்ததே.



1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார் காமராஜர் அவர்கள். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார்.

காமராசர்  அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.  (மேற்கூறிய தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது)

காமராஜர் அவர்கள் செய்த நன்மைகள் பல இருந்தாலும் கல்வி என்பதே எப்போதும் முதன்மையாக மக்களால் பேசப்படுகிறது, காரணம் அன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை மிக நுட்பமான தனது அறிவாற்றலால் மக்களுக்கு கிடைக்க செய்தார், அதன் விளைவே இன்று நீங்களும் நானும் கல்வி கற்று நாகரீக உடை அணிந்து பல நிறுவனங்களில் பணிபுரிகிறோம்.

இந்த படிக்காத மேதையை தமிழக அரசியல் காணாதிருந்தால், துணி துவைப்பவர் மகன் துணி துவைத்துகொண்டே இருப்பான், முடி வெட்டுபவர் மகன் முடிவெட்டிகொண்டே இருப்பான், பனை ஏறுபவன் மகன் பனை எறியாகவே இருந்திருப்பான்.

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் காமராஜர் அவர்கள் என்பதற்கு ஒரு சிறந்த நிகழ்வு,

இலவசமாக பள்ளிக்கூடங்கள் கட்டி இலவசமாக கல்வி கற்று கொடுத்தும் பலரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவதை அறிந்த இந்த தங்க தலைவன் அதன் காரணத்தை அறிய விளைந்தார். அதற்கான காரணம் பசி என்றறிந்தபோது அப்படியானால் உடனடியாக மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த கட்டளையிட்டார் காமராஜர் அவர்கள்.

இப்படியாக எப்படியாவது என் மக்களுக்கு நல்லது செய்துவிட வேண்டும் என்று எண்ணிய காமராஜர் அவர்கள் தேர்தலில் தோல்வியை தழுவியபோது அவர் நண்பர் ஒருவர் கூறுகிறார் நீங்கள் செய்த நல்லவைகளை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்டிருந்தால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பீர்கள் என்று.

அப்போது அய்யா காமராஜர் அவர்கள் சொன்ன வார்த்தைகள், பெற்ற தாய்க்கு சேலை எடுக்கு கொடுத்தமகன் அதை ஊர் முழுவதும் சொல்லி பெருமைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை, என் கடமையை நான் செய்தேன் என்றார்.

தான் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருமுறை தனக்கு கிடைக்கப்பெற்றும் அதை மற்றவர்களுக்கு விட்டுகொடுத்த பெரும் தலைவர்.

இப்படிபட்ட ஒரு உன்னத தலைவரின் பெயரை இந்த களவாணி காங்கிரஸ் இப்போதும் கூட நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிடும்போது சேர்த்துக் கொள்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு முறை காமராஜர் ஆட்சி செய்வோம் என்று சொல்கிறார்கள்.

தன்னலம் இல்லாத ஒரு காங்கிரஸ் தலைவன் அல்லது தொண்டன் இருப்பான இந்த தமிழக காங்கிரஸ் கட்சியில், பதவி சுகத்துக்காக ஒரு இனத்தையே அளித்த இந்த துரோகிகளுக்கு காமராஜர் ஆட்சி பத்தி பேச என்ன அருகதை இருக்கிறது.

பள்ளி கல்லூரி என்று கட்டி வைத்துக்கொண்டு கல்வியை வியாபாரமாய் செய்துகொண்டிருக்கும் காங்கிரஸ்காரன் எத்தனையோபேர் இருக்கிறார்கள் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இலவச கல்வி தந்த காமராஜரை உரிமை கொண்டாட.

காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார் என்பதற்காக இன்னமும் அவர் செய்த நல்ல செயல்களை சொல்லித்தான் இந்த ஈன பிறவிகள் வாக்கு கேட்க்கின்றன, ஏன் அதன் பிறகு எத்தனையோ பேர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தீர்கள் அப்போதெல்லாம் என் செய்தீர்கள். அப்படி எதையாவது செய்திருந்தால் அதை சொல்லி அல்லவா வாக்கு கேட்டிருப்பீர்கள்.

ஒரு நல்ல தலைவன் அவர் தான் செய்த நன்மைகளையே சொல்லி வாக்கு கேட்க்க விருப்பமில்லாமல் தோல்வியை தழுவிய அன்னாரின் பெருமைகளை சொல்லி வாக்கு கேட்க்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை இனியாவது நாம் புரிந்துகொள்ள முன்வரவேண்டும் தமிழ் சொந்தங்களே.

இன்னமும் காமராஜர் ஆட்சி என்று சொல்லி வாக்கு கேட்க்கும் களவாணி காங்கிரஸ் கட்சியை தமிழன் நலன் கருதி, தமிழன் பாதுகாப்புக் கருதி தமிழ் நாட்டில் இல்லது செய்திட வேண்டும்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Friday, April 4, 2014

மாற்று அரசியல் புரட்சி அல்ல நாங்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சியே

தமிழர்களின் உயிர் மீதும் உரிமை மீதும் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் தமிழர்களின் பெயரை சொல்லி யார் வேண்டுமானாலும் அரசியல் நடத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல அரசியல் கட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இப்போது புதிதாக தன்னை இணைத்துக்கொண்டுள்ளது திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் ஆரம்பித்திருக்கும் நாம் தமிழர் என்ற கட்சி.

2009 ஆம் ஆண்டில் நம் அன்பு உறவுகள் பட்ட துயரங்களை கண்டு மனம் கொதித்து போன லட்ச்சோப லட்ச்ச இளைஞ்சர்கள் சீமான் அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவரின் பின்னால் அணிவகுக்க தொடங்கினர், அப்படி சென்றவர்களில் நானும் ஒருவன்.

துன்பங்களில் துவண்டு போயிருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனி சுகம் வரப்போகிறது என்று மிகுந்த நம்பிக்கை வரவழைத்தது சீமான் அவர்களின் பேச்சு.

மற்றும் ஒரு அரசியல் கட்சி அல்ல மாற்று அரசியல் புரட்ச்சி என்று அவர் மேடைகளில் முழங்கும்போதெல்லாம் மனதில் தமிழன் என்ற கர்வம் வந்துசெல்ல தவறவில்லை.

இப்படியாக சென்ற நாம் தமிழர் கட்சி நாளடைவில் தன்னையும் மற்றும் ஒரு அரசியல் கட்சி என்பதுபோல நடந்துகொண்டது. எப்போது சீமான் அவர்கள் தனது நோக்கம் தவறி அரசியல் செய்தார்களோ அங்கே தான் அவர்களின் தோல்வி ஆரம்பம் ஆனது. இப்போது கொள்கை சித்தாந்தம் வலுவாக இல்லாத சரியான தெளிவு இல்லாத ஒரு காட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி தன்னை மற்றும் ஒரு அரசியல் கட்சி என்று பறைசாற்றிய முதல் நிகழ்வு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியபோது என்னவோ இலங்கை தண்டிக்க பட்டு விட்டது என்பதுபோல பேச ஆரம்பித்துவிட்டார்.

அவர் மேடையில் முழங்கிய வார்த்தைகள் ஜெயலலிதா அவர்களை ஈழத்தாய் என்றது பலருக்கும் மிகுந்த வேதனை தரும் நிகழ்வாகவே அமைந்தது. மேலும் கருணாநிதி அவர்களுடன் ஒப்பிட்டு ஜெயலலிதா அவர்களை புரட்ச்சித் தலைவி என்றும் ஜெயலலிதா அவர்களின் பெயர் இல்லாமல் ஈழம் வரலாறு எழுதப்படாது என்றும் அவர் பேசியது தமிழ் உணவாளர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது.

ஜெயலலிதா அவர்கள் ஈழம் மற்றும் புலிகள் மீது கொண்டிருந்த பார்வை என்னவென்று அறிந்தும் சீமான் அவர்கள் தமிழக முதல்வரை இப்படி எல்லாம் புகழ்ந்தது எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அ தி மு க விற்கு வாக்கு கேட்க்கும் சீமான் பெருமை அடைவானே தவிற ஒரு போதும் சிறுமை அடைய மாட்டான் என்ற சீமான் அவர்கள் அதற்கு சொன்ன காரணம் தி மு க - வை தோல்வி அடைய செய்யவே அ தி மு க  -வை ஆதரிக்கிறோம் என்று, அதே காரணத்தை கூறித்தான் காங்கிரஸ் என்ற கட்சியை ஆட்ச்சியை இழக்க செய்ய  ப ஜ க - வுடன் ம தி மு க கூட்டணி வைக்கிறது என்று கூறும் வை கோ அவர்களை விமர்சனம் செய்கின்றார்.

இப்போது அ தி மு க -விற்கு ஆதரவு பிரச்சாரம் செய்யப்போவதாக கூறி உள்ளார் சீமான் அவர்கள், இதற்கான காரணம் மட்டும் யாருக்குமே தெரியவில்லை.

கூடங்குளம் அணுஉலை எதிர்த்து போராடிய உதயகுமார் அவர்களை பாராட்டி எத்தனையோ மேடைகளில் பேசிய சீமான் அவர்கள் கன்னியாகுமரியில் உதயகுமார் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் அ தி மு க -விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது ஏனோ தெரியவில்லை. ஆகா இதுபோல் பல கேள்விகள் இன்று நாம் தமிழர் கட்சிமேல்.

இப்போது மக்கள் மனதில் சீமான் அவர்கள் ஒரு அ தி மு க ஆதரவாளனாகத்தான் தெரிகிறாரே தவிற இவராலோ அல்லது இவரது கட்ச்சியாலோ தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் விளையப்போவதில்லை என்பதை தெளிவாகவே புரிந்திகொண்டுள்ளனர்.

ஆகவே இப்போது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது நாம் தமிழர் கட்சி ஒன்றும் மாற்று அரசியல் புரட்சி அல்ல மற்றும் ஒரு அரசியல் கட்சியே.

எது என்னவான போதும் இப்போதும் தமிழையும் தமிழ் நாட்டையும் நேசிக்கும் பல லட்சம் தமிழர்கள் இருப்பது என்னவோ உண்மைதான்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

Thursday, April 3, 2014

முதல் வலைப்பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம்


அரசியல் மீது கொண்ட காதலால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் இந்த வலையகம் தொடங்கியுள்ளேன். தமிழனின் அரசியலே தெளிவில்லாத சூழலில் உலக மற்றும் இந்திய அரசியலை தவிர்த்து தமிழக அரசியல் சார்ந்த பதிவுகள் பதிவிடலாம் என்ற நோக்கமே இந்த வலையகம் பிறந்த கதை.

தமிழகத்தை ஆண்ட ஆளும் அரசியல் தலைவர்களை பற்றி பதிவுகளை பதியலாம் என எண்ணியுள்ளேன்! எண்ணம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் முதல் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்.

முதல் பதிவு ஆகையால் தமிழனின் வீரத்தை சொல்லிவிடலாமே, உங்களுக்காய் புரட்ச்சிக்கவி பாரதியின் வரிகள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ